இராமனிடம் யாது கூறவேண்டும் என்று
அனுமன் கேட்டல்

5371.

'நன்று !நன்று ! இவ் உலகுடை நாயகன்
தன் துணைப்பெருந்தேவி தவத் தொழில்'
என்று சிந்தைகளித்து, உவந்து, ஏத்தினான்-
நின்ற சங்கைஇடரொடு நீங்கினான்.

(அனுமன்)

     நின்ற - உள்ளத்தேநிலைத்திருந்த; இடரொடு சங்கை - துன்பத்துடன்கூடிய ஐயப்பாடு; நீங்கினான் - நீங்கப்பெற்று; உலகுடை
நாயகன்தன் -
உலக நாதனாகிய இராமபிரானுடைய; துணை - வாழ்க்கைத்
துணைவியான;பெருந்தேவி - பெரிய பிராட்டியின்; தவத் தொழில் -
தவத்தால் விளைந்தஒழுக்கம்; நன்று நன்று - பெரியது பெரியது; என்று -
என்று நினைத்து(அனுமன்); களித்து உவந்து - செருக்குடன் கூடிய
மகிழ்ச்சியடைந்து;ஏத்தினான் - புகழ்ந்தான்.

     நீங்கினான்என்னும் முற்று எச்சப் பொருளில் வந்தது. பிறர் அதனை
வினையாலணையும் பெயராக்கினர். தவத் தொழில் என்பதில் உள்ள தொழில்
ஒழுக்கம்  என்னும் பொருள் தந்தது. தொழில் பெருமை என்னும் பொருள்
தருவதாக அகராதி நிகண்டு பேசும். தொழிலே தொல்லையும் பெருமையும்
காட்டும் (தொம்முதல் 18) சான்றோரை எண்ணும் போது எண்ணுபவர்
இதயத்தே செருக்கும் மகிழ்சசியும் உண்டாவது இயற்கை. களித்து உவந்து
என்பதற்குச் செருக்குடன் கூடிய மகிழ்ச்சி என்று கம்பராமாயண அகராதி
விளக்கம் தந்தது. (களிப்பு-பார் சங்கை - ஐயம். இரண்டாம் கவிச்சக்கரவர்த்தி.
சங்கையில்லாதன சங்கையாம் (கண்ணண் பாட்டு) என்று பாடினான்.
இராவணனால் பிராட்டிக்கு இடையூறு நேருமோ என்னும் ஐயத்தால் உண்டான
துன்பம் இடரொடு சங்கை என்ற தொடரால் விளக்கப் பெற்றது. பெருந்தேவன்
மனைவியாதலின் பிராட்டி பெருந்தேவி ஆனாள். காஞ்சி  
நகர்த் தாயாரின்
பெயர் பெருந்தேவி என்பது. கொங்குவேள் உடன்முடி கவித்தகடன் அறி
கற்பின் இயற்பெருந்தேவி (பெருங்கதை 2.4.23.24) என்பர்.  தேவியே உன்
தவத் தொழில் சிறந்தது என்று பிராட்டியை முன்னிலையாக்கித் துதித்தான்
என்று உரை கண்டனர் உளர். அவர் தேவி என்பதை அண்மை விளியாக்கினர். மேற்பாட்டில் கூறினான் என்றமையால் இங்ஙனம் பொருள்
கொள்ள நேர்ந்தது போலும்.                                  (27)