5375.

'ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு
வார்த்தை கூறுதி;"மன் அருளால் எனைக்
காத்து இருந்ததனக்கே கடன், இடை
கோத்த வெஞ்சிறை வீடு" என்று கூறுவாய

     ஏத்தும் -யாவராலும்புகழப்படும்; வென்றி - வெற்றியை உடைய;
இளையவற்கு - இலக்குவனுக்கு; ஈது ஒரு வார்த்தை - இந்த ஒரு
மொழியை; கூறுதி - சொல்லுக; மன் அருளால் - இராமபிரானுடைய
கட்டளையால்; எனை - என்னை; காத்திருந்ததனக்கே - பாதுகாத்திருந்த
இளையவற்கு; கடன் - (இப்போதும் காப்பது) கடமை உள்ளது (ஆதலால்);
இடை கோத்த - நடுவில் என்னைப் பிணித்த; வெஞ்சிறை - கொடிய
சிறையிலிருந்து; வீடு - விடுவிக்க; என்று கூறுவாய் - என்று கூறுவாயாக.

     பிராட்டிசிந்தித்துச் சிந்தித்துப் பேசுகின்றாள். ஆதலால் பேச்சு இடை
இடையே தடுமாறி வருகிறது. இலக்குவனை எண்ணும்போது அவன்பால்தான்
கூறிய கடுஞ்சொற்கள் நினைவு வந்தது போலும். இளையவற்கு ஒரு வார்த்தை
சொல்... இராமபிரான் கட்டளையால் பாதுகாத்தவற்குத் தான் கடமை உண்டு...
இடையிலே என்னைப் பிணித்த சிறையிலிருந்து விடுவிப்பது என்று கூறுக
என்ற தொடர் அமைப்பு அதனைக் காட்டும்                     (31)