5376.

' "திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்;
இங்குவந்திலனேஎனின், யாணர் நீர்க்
கங்கையாற்றங்கரை, அடியேற்கும், தன்
செங் கையால்கடன் செய்க" என்று செப்புவாய்.

     திங்கள்ஒன்றில் - ஒருமாத காலஎல்லையில்; என் - என்னுடைய;
செய்தவம் - செம்மையான தவம்; தீர்ந்ததால் - நிறைவேறுகிற படியால்;
(அதற்குள்) (இராமபிரான்) இங்கு
 வந்திலனே எனில் -இங்கவாராமற்
போவானேயானால்; யாணர் நீர் - அழகிய நீர்ப் பெருக்கை உடைய;
கங்கையாற்றங்கரை - கங்கை நதியின் கரையில்; அடியேற்கும் -
அடியேனுக்கும்; தன் - தன்னுடைய; செங்கையால் - சிவந்த கரங்களால்;
கடன் செய்க என்று - இறுதிச் சடங்கைச் செய்க என்று; செப்புவாய் -
சொல்வாயாக.

     ஒரு மாதஎல்லையில் தவம் நிறைவு பெறுகிறது. அதற்குள் வந்தால்
என்னைப் பார்க்கலாம். இல்லையேல் இறந்து படுவேன். அச்சடங்கு செய்ய
இங்கு வரவேண்டா. அதை அங்கே அருகில் உள்ள கங்கைக் கரையில் செய்க
என்று கூறுக என்று கூறுவதால் பிராட்டியின் மனநிலை புலப்படுகிறது.
செய்தவம் - செம்மையான தவம். 'செய்திருவினைஉற' (கம்ப. 2624) செய்யும்
தவம் என்று கூறினும் அமையும்.                             (32)