5377. | ' "சிறக்கும் மாமியர் மூவர்க்கும், சீதை ஆண்டு இறக்கின்றாள்தொழுதாள்" எனும் இன்ன சொல், அறத்தின்நாயகன்பால்; அருள் இன்மையால் மறக்கும்ஆயினும்,நீ மறவேல், ஐயா ! |
ஐயா - தந்தையே; சிறக்கும் - உயர்வடைகின்ற; மாமியர் மூவர்க்கும் - மூன்று மாமிகட்கும்; ஆண்டு - அந்த இலங்கையில்; இறக்கின்றாள் சீதை - இறக்கப் போகும் சீதை; தொழுதாள் - கைகூப்பி வணங்கினாள்; எனும் - என்கின்ற; இன்ன சொல் - இந்த வார்த்தை; அறத்தின் நாயகன்பால் - அறத்தின் தலைவனான இராமபிரான்பால்; அருள் இன்மையால் - கருணையில்லாத காரணத்தால்; மறக்கும் ஆயினும் - (அவர்கள் பால் கூற) மறந்து போயினும்; நீ மறவேல் - நீ மறந்து விடாதே. அறத்தின்நாயகன் எதிர்மறைத் தொனி. அறம் இல்லாதவன் என்பது பொருள். இறக்கும் ஒருத்தி கூறிய மொழியை மறப்பவன் அறம் இல்லாதவன் என்று கூறவேண்டுமோ. அவர்பால் அறம் உண்டு. அருள் இல்லை என்று இராமனை விமர்சனம் செய்கின்றாள். இராமபிரான் தண்டகவனத்து முனிவர்கள்பால் கூறிய மொழியை இங்கே எண்ணும் பிராட்டி இங்ஙனம் பேச நேர்ந்தது. (33) |