5381.

'தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்,
அன்னைநோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல்நோய்க்கும், அங்கு ஏகுவது அன்றியே,
என்னை நோக்கி,இங்கு, எங்ஙனம் எய்துமோ ?

(இராமபிரான்)

     தன்னைநோக்கி - தன்னையே எண்ணி; உலகம் - உலக மக்கள்;
தளர்தற்கும் - தளர்ச்சியடைவதைப் போக்குவதற்கும்; அன்னை நோய்க்கும்
-
தாயின் துன்பத்தைப் போக்குவதற்கும்; அங்கு - அயோத்தியில்; பரதன்
ஆற்றுறும் -
பரதன் சுமக்கின்ற; இன்னல் நோய்க்கும் - துன்பமாகிய
நோயைப் போக்குவதற்கும்; அங்கு ஏகுவது அன்றி - அயோத்திக்குச்
செல்வதேயல்லாமல்; என்னை நோக்கி - (தகுதியற்ற) என்னை மனத்தில்
நினைத்து; எங்ஙனம் - எப்படி; இங்கு எய்தும் - இந்த இலங்கைக்கு
வருவார்.

     தளர்தற்கும்நோய்க்கும் என்பது தளர்ச்சியைப் போக்குதற்கும்
நோதற்கும் என்று உரை கொள்க. பிணிக்கு மருந்து, மறத்திற்கும் அஃதே
துணை. துன்பத்திற்கு யாரே துணை என்னும் குறட் பகுதிகளை நோக்குக.
இராமபிரான், உலகத் துன்பத்தையும், தாயின் நோயையும், சகோதரன்
நோயையும் போக்க நினைப்பது முறை. தன் ஒருத்தியின் துன்பம் போக்க
அவன் கருதாதிருப்பது குற்றம் அன்று, என்று பிராட்டி பேசினாள். எய்துமே
என்பதில் உள்ள ஏகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது. பதினான்கு வருடம்
முடிந்தாலன்றி இராமபிரான் அயோத்தி செல்லான் என்பதைப் பிராட்டி
மறந்தது துன்பத்தின் மிகையால் அல்லது வெறுப்பால் என்க. ஆற்று+உறும்-
ஆற்றுறும் உறு என்பது துணைவினை. ஆற்றும் என்க.              (37)