5385.

'கைத்து ஓடும் சிறை, கற்போயை
வைத்தோன் இன்உயிர் வாழ்வானாம் !
பொய்த்தோர்வில்லிகள் போவாராம் !
இத்தோடு ஒப்பதுயாது உண்டே ?

     கற்போயை -கற்புவடிவமான உன்னை; கைத்து ஓடும் சிறை -
(கண்டவர்கள்) வெறுத்து ஓடும் சிறையில்; வைத்தோன் - சிறைவைத்த
இராவணன்; இன்னுயி்ர் வாழ்வானாம் - இனிய உயிருடன்
வாழ்ந்திருப்பானாம்; ஓர் வில்லிகள் - ஒப்பற்ற வில்லேந்திய
இராமலக்குவர்கள்; பொய்த்து - கடமையிலிருந்து தவறி; போவாராம் -
திரும்பிப் போய் விடுவார்களாம்; இத்தோடு ஒப்பது - இதனை ஒக்கும்
நிகழ்ச்சி; யாது உண்டு - யாது உள்ளது;

     சிறையின்கொடுமையால் எவரும் அதைக் கண்டால் வெறுத்து ஓடுவர்.
கற்பு, ஓயை எனப்பிரித்து கற்பின் நெறியில் உள்ள அன்னை என்று பொருள்
கொண்டு, என்னினிச் செய்வது எம் மோய் என்னும் பாடல் (கம்ப. 6034)
மேற்கோள் காட்டப்பட்டது. அங்கு 'மோய்' என்பதே சொல். ஒய் அன்று 'உன்
மோயினி வருத்தமும்' என்றே குலசேகரர் பேசுவார் (பெருமாள் 99)
பொய்த்தல் - தவறுதல், விண்நின்று பொய்ப்பின் - (குறள் 17) (அடை பதிப்பு)
இராமபிரான், அரக்கர்களை அழித்து, அறத்தை நிலைநாட்டுவேன் என்று
தண்டக வன முனிவர் பால் கூறியதைத் தவறிப் போகான் என்பது குறிப்பு.
கைத்து ஓடும் சிறை
 என்பதற்குசிறைப்பட்டார் உயிர் வாழ்க்கையை வெறுத்த
உடலை விட்டும் ஓடுதற்குக் காரணமான சிறை. என்று நயவுரை கூறுவாரும்
உளர். கைத்து ஓடும்சிறை - உன் கற்புக்குப் பயந்துதானே வெறுத்து ஓடும்
சிறை என்பது பழைய உரை. (அடை - பதி) இத்தோடு என்பதில் உள்ள ஓடு
உருபு 'ஐ' உருபாகக் கொள்ளப் பெற்றது. செயப்படு பொருளாதலின் ஒத்தல்
இரண்டன் உருபல்லவா?                                    (41)