5386.

'நல்லோய் ! நின்னை நலிந்தோரைக்
கொல்லோம், எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல,எம் கோனும்
வில்லோடும் செலவேண்டாவோ ?

     நல்லோய் -நற்பண்புஅமைந்த தாயே; நின்னை நலிந்தோரை -
உன்னை வருத்திய அரக்கர்களை; கொல்லோம் - கொல்லாமல்; எம் உயிர்
கொண்டு -
எங்கள் உயிரைச் சுமந்து கொண்டு; அங்கே - அயோத்திக்கு;
எல்லோமும் செல - யாங்கள் யாவரும் போக; (எம்மைப் போல)
எம்கோனும் - எம் தலைவனான இராமபிரானும் (அயோத்திக்கு);
வில்லோடும் - வில்லுடனே; செலவேண்டாவோ - போக வேண்டாமா.

     யாங்கள் உயிருடன் செல்கிறோம். அதுபோல் இராமபிரான் வில்லோடு
போக வேண்டாமோ. எங்கள் உயிரிருக்கும் வரையிலும், இராமபிரான்
வில்லிருக்கும் வரையிலும் யாங்கள் போராடிச் சிறை மீட்போம் என்பது
கருத்து. இராமபிரான் வில்லைப் போல யாங்களும் இராவணனின்
கொடுமையை அழிப்போம் என்பது குறிப்பு. கொல்வோம் என்னும் முற்று
எச்சப்பொருள் தந்தது. கொல்லாது என்பது பொருள் ! இராமபிரான் அயோத்தி
சென்று முடிசூட்டிக் கொள்வான் என்று கருதிய பிராட்டிக்குக் கூறப் பெற்ற
அசதி மொழி.                                               (42)