| 5387. | 'நீந்தாஇன்னலில் நீந்தாமே, தேய்ந்து ஆறாதபெருஞ் செல்வம் ஈந்தானுக்கு உனைஈயாதே ஓய்ந்தால்,எம்மின் உயர்ந்தார் யார் ? |
நீந்தா -நீந்திக்கடக்க மாட்டாத; இன்னலில் - (வாலியால் உண்டான) துன்பத்திலே; நீந்தாமே - வருந்தாதபடி; தேய்ந்து ஆறாத - குறைந்து இல்லமாற் போகாத; பெரும் செல்வம் ஈந்தானுக்கு - பெரிய செல்வத்தை எங்கட்கு வழங்கிய இராமபிரானுக்கு; உனை ஈயாதே - உன்னைச் சிறைமீட்டு வழங்காமல்; ஓய்ந்தால் - செயலற்றுக் கிடந்தால்; எம்மின் - எம்மைவிட; உயர்ந்தார்யார்- சிறந்தவர் யாவரோ. நீந்துதல்,துன்பத்தில் கிடத்தல். நீந்தல் கடத்தல் என்னும் பொருளைத் தந்தது வசைவெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் என்று தசரதன் கைகேயிடம் பேசுவான். அறாத என்பது ஆறாத என்று வந்தது. உயர்ந்தார் யார் என்பது இழிந்தவர் என்னும் பொருள் தந்தது. பிறர்க்கு அடிமையின்றி வாழ்வதைப் பெருஞ்செல்வம் என்று அனுமன் குறித்தான். வாலியால் அடிமைப்பட்டவர்கள் இராமபிரானால் சுதந்திரம் பெற்றனர். சுக்கிரீவன் அஞ்சிக் குகையில் ஒளிந்து வாழ்ந்ததே அடிமை வாழ்வைக் குறிக்கிறது. (43) |