| 5388. | ' "நன்றுஆம் நல்வினை நல்லோரைத் தின்றார்தம்குடர் பேய் தின்னக் கொன்றால் அல்லது, கொள்ளேன் நாடு" என்றானுக்கு, இவைஏலாவோ ? |
நன்று ஆய் -சிறந்ததைஆராய்கின்ற; நல்வினை - சிறந்த தொழில்களையுடைய; நல்லோரை - முனிவர்களை; தின்றார் தம் - தின்ற அரக்கர்களின்; குடர் - குடலை; பேய்தின்ன - பேய்கள் தின்னும்படியாக; கொன்றால் அல்லது - அரக்கர்களைக் கொன்றால் அல்லாமல்; நாடு கொள்ளேன் - கோசல நாட்டைப் பெறமாட்டேன்; என்றானுக்கு - என்று முனிவர் பக்கல் கூறிய இராமபிரானுக்கு; இவை - அரக்கரை அழித்தலும் சிறை மீட்டலும்; ஏலாவோ - செய்ய முடியாத செயலா ? நன்று என்பதுபெரிது என்னும் பொருள்தரும். அஃது இங்கே பிரமத்தைக் குறிக்கிறது. இயமம் முதலானவை ஆரம்ப சாதகர்கட்கே. இம் முனிவர்கள் யோகநிலை தாண்டி தவநிலைக்கு வந்தவராதலின் நன்று என்பதற்கு இயமம் முதலானவை என்று கூறும் உரை ஏலா. கொள்ளுதல், நாட்டு ஆட்சியைப் பெறுதல். இராமபிரான் சூர்ப்பனகை பால் அரக்கர் குலம் தொலைத்து... நகர் புகுவேம்' என்று கூறினான். இராமபிரான் தண்டக முனிவர் பால் கூறிய சபதத்தை அகத்தியப் படலத்தில் காண்க. (கம்ப. 2647-52) ஏலுதல் - செய்தல். அதன் எதிர் மறை வடிவம் ஏலாவோ என்று வந்துள்ளது. இயலும் என்பதன் திரிபே ஏலும் என்பது. (44) |