5390. | ' "பூண்டாள் கற்புடையாள் பொய்யாள், தீண்டா வஞ்சகர்தீண்டாமுன், மாண்டாள்"என்று, மனம் தேறி மீண்டால்,வீரம் விளங்காதோ ? |
(யாங்கள்) கற்புடையாள்- கற்புடையவளும்; பொய்யாள் - பொய்யில்லாதவளும் ஆகிய பிராட்டி; தீண்டா - நெருங்கத்தகாத; வஞ்சகர் - வஞ்சக வடிவான அரக்கர்கள்; தீண்டாமுன் - தொடுவதற்கு முன்பு; மாண்டாள் - இறந்துபட்டாள் (அதனால்); பூண்டாள் - புகழை அணிந்து கொண்டாள்; என்று - என்று கருதி; மீண்டால் -திரும்பிச் சென்றால்; வீரம் - எங்களுடைய வீரமானது; விளங்காதோ - விளக்கம் அடையாதா. சீதை இறந்துபட்டாள். இனிப் பகைவருடன் போராடுவதால் பயனில்லை என்று திரும்பினால் எங்கள் வீரம் விளக்கம் அடையாதா என்று அனுமன் கூறுவது அசதியாடலின் உச்சம். கொல்லாது திரும்பின் அகிம்சா வீரர்கள் என்று இராமன் முதலானவர்களை உலகம் கொண்டாடும் என்று கூறுவதன் மூலம் எது அகிம்சை, எது அகிம்சையல்ல என்பது விளக்கப்படுகிறது. பூண்டாள் - புகழை ஆபரணமாக அணிந்தாள்; மாண்டாள், அதனால் புகழ் பூண்டாள் என்க. (46) |