| 5399. | 'சூல் இரும் பெரு வயிறு அலைத்துச் சோர்வுறும் ஆலிஅம்கண்ணியர் அறுத்து நீத்தன, வாலியும் கடப்பஅரு வனப்ப, வான் உயர் தாலி அம் பெருமலை தயங்கக் காண்டியால். |
(அம்மையே) சோர்வுறும் -சிந்துகின்ற; ஆலி கண்ணியர் - நீர்த்துளிகளுடன் கூடிய கண்களை உடைய அரக்கிமார்கள்; சூல் - கருக் கொண்டாற் போன்ற; இரும் பெருவயிறு அலைத்து - மிகப் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு; அறுத்து நீத்தன - அறுத்து ஒதுக்கியனவும்; வாலியும் கடப்ப அரு - வாலியாலும் தாண்ட முடியாத; வனப்ப - தோற்றத்தை உடையனவும் (ஆகிய); வான் உயர் - வானம் அளாவிய; தாலி பெரு மலை - தாலியாகிய மலை; தயங்கக் காண்டி - விளங்குவதைப் பார்ப்பாயாக. சூல் - கரு.இயல்பாக உள்ள பெருவயிறு சூல் கொண்டாற்போல் இருக்கும். ஆலி - நீர்த்துளி. அறுத்து நீத்தனவும், வாலியாலும் கடக்கவியலாத தோற்றத்தை உடையனவும் ஆகிய தாலிமலை. சூல் - முட்டை போன்று உருண்டு பருத்திருக்கும்வயிறு. மழைச் சூல் உடும்பு பெரும்பாண் 132) ஆலியம் கண்ணினர், தாலியம் பெருமலை என்பனவற்றில் உள்ள 'அம்' சாரியை. காண்டியால் - இதில் உள்ள ஆல் அசை. இதனால் அரக்கர்கள் அழிவர். உறுதி. உனக்கும், உலகுக்கும் நல்ல காலம் வரும் என்பது குறிக்கப்பெறுகிறது. (55) |