5401.

'கரம் பயில் முரசுஇனம் கறங்க, கை தொடர்
நரம்பு இயல்இமிழ் இசை நவில, நாடகம்
அரம்பையர் ஆடியஅரங்கின், ஆண் தொழில்
குரங்குகள் முறைமுறை குனிப்பக் காண்டியால்.

     கரம் பயில் -கைகளால்முழக்கப்படும்; முரசு இனம் கறங்க - முரசும்அதன் இனமான வாத்தியங்களும் ஒலிக்க; கை தொடர் - கைகளால்
இயக்கப்பெறும்; நரம்பு இயல் - (வீணை யாழ் முதலானவற்றில் உள்ள)
நரம்புகள்இயன்ற; இமிழ் இசை நவில - ஒலிக்கும் இசையை ஒலிக்கவும்;
அரம்பையர்-
தேவ மகளிர்; நாடகம் ஆடிய அரங்கில் - நடனம் ஆடிய
மேடைகளில்;ஆண் தொழில் குரங்குகள் - ஆண்மைத் தொழில் புரிந்த
குரங்குகள்;முறைமுறை - வரிசை வரிசையாக; குனிப்ப - கூத்தாடுதலை;
காண்டி -
காண்பாயாக.

     நவிலுதல் -ஒலித்தல். இளம் நவில் அன்னம் (பம்பை வாவி8) குனித்தல்
என்னும் தொழிற் பெயர் குனிப்ப என்று பெயரெச்ச வடிவில் உள்ளது. குனிப்ப
என்பதற்குக் குனித்தலைச் செய்ய என்பதே பொருள். 'திருமறு மார்ப நீ அருள
வேண்டும்' என்று பரிபாடல் பேசும் (பரிபாடல் 1-36) அருள வேண்டும்
அதிகை வீரட்டனீரே என்று அப்பர் பேசுவார் (தேவா 26-4) அருளல்
வேண்டும் என்பது அருள என உருக்கொண்டது. இதுவரை, அரக்கர்கள் மகிழ
அரம்பையர் நாடகம் ஆடினர். இனி அரக்கர்கள் வருந்தக் குரங்குகள் நாடகம்
ஆடும். என்றதனால் அரக்கர்களின் அழிவு உறுதி செய்யப்பெறுகிறது.    (57)