5402.

'புரை உறுபுன் தொழில் அரக்கர் புண் பொழி
திரை உறு குருதியாறு ஈர்ப்பச் செல்வன,
வரை உறு பிணப்பெரும் பிறக்கம் மண்டின,
கரை உறு நெடுங்கடல் தூர்ப்பக் காண்டியால்.

     புரை உறு -குற்றம்பொருந்திய; புண் தொழில் அரக்கர் - அற்பத்
தொழிலை உடைய அரக்கர்களின்; புண் பொழி - புண்கள் கொட்டுகின்ற;
திரை உறு - அலைகள் பொருந்திய; குருதியாறு ஈர்ப்ப - இரத்த நதிகள்
இழுப்பதால்; செல்வன - செல்பவையான; வரை உறு -  மலை போன்ற;
பிணப் பெரும் பிறக்கம் - பிணங்களின் பெரிய குவியல்; மண்டின -
நெருங்கின வாய்; கரைஉறு - கரைகளைப் பெற்றுள்ள; நெடுங்கடல் - பெரிய
கடலை; தூர்ப்ப - தூர்த்தலை; காண்டி - காண்பாயாக.

     ஆல் - அசை. புரை- குற்றம். தூர்த்தல் - பள்ளத்தை மேடாக்குதல்.
இதனால் கொடுங்கோலரின் கதி, உயர்பு நவிற்சியால் பேசப் பட்டது. இராம
காதையின் அடிப்படையே பொல்லாரின் வீழ்ச்சியே.                  (58)