5404.

'தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின,
பாக்கியம் அனையநின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை, நுதி கொள் மூக்கினால்,
காக்கைகள்கவர்ந்து கொண்டு, உண்ணக்
                               காண்டியால்.

(பிராட்டியே)

     காக்கைகள் -காகங்கள்; தாக்கு இகல் - பகைவர்கள் மோதும்
போரிலே (விழுந்த); இராவணன் தலையில் - இராவணனுடைய தலைகளில்;
தாவின -
தாவியமர்ந்து கொண்டு; பாக்கியம் அனையன - நல்வினைப்
பயன் போலும்; நின் - உன்னுடைய; பழிப்பு இல் மேனியை - பழிப்பற்ற
திருமேனியை; நோக்கிய கண்களை - பார்த்த கண்களை; நுதி கொள்
மூக்கினால் -
கூர்மை கொண்ட அலகுகளால்; கவர்ந்து கொண்டு - கொத்தி
எடுத்துக் கொண்டு; உண்ண - உண்ணுதலை; காண்டி - பார்ப்பாயாக.

     தாக்கு இகல் -என்பதை இராவணனுக்கு அடைமொழி ஆக்கினும்
அமையும். காக்கைகள், கண்களை உண்ணக் காணுதி. பாக்கியம் - நல்வினைப்
பயன். பிராட்டி, 'கண்ட வாளரக்கன் விழி காகங்கள் உண்ட போதன்றி யான்
உளென் ஆவெனோ (கம்ப. 5359) என்று கூறியதைக் கருத்திற் கொண்டு
திருவடி பேசிய நுட்பம் அறிக. உலகின் துன்பம் கண்டு, மகிழ்ந்த
கொடுங்கோலனின் கண்களை உண்டு காகம் மகிழும் காலம் வரப் போகிறது.
இது தீயவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை. நல்லவர்கள,் தீயவர் வீழ்ச்சியில்
மகிழ்வர். பி்றர் துயர்ப்படுவர். உலகியல் கண்டு தெளிக. கொடுங்கோல்
அழிவில் மகிழாதவர்கள் யாவரே எனினும் அவர் தீயவரே. அனுமன்
நல்லோன் ஆதலின் கொடியவர் வீழ்ச்சியை விவரித்து மகிழ்ந்தான்.    (60)