| 5406. | 'நீர்த்துஎழு கணை மழை வழங்க, நீல வான் வேர்த்தது என்றுஇடை இடை வீசும் தூசுபோல், போர்த்து எழுபொலங் கொடி இலங்கை, பூழியோடு ஆர்த்து எழு கழுதுஇரைத்து ஆடக் காண்டியால். |
நீர்த்துஎழும் கணை - தன்மை உடையதாய் எழும் அம்புகளாகிய; மழை வழங்க - மழையைப் பொழிய (அதை); நீலவான் - நீலநிறமுடைய ஆகாயத்துக்கு; வேர்த்தது என்று - வியர்வை உண்டாயிற்று என்று; இடை இடை - இடை இடையே; வீசும் தூசு போல் - வீசுகின்ற ஆடையைப் போல; போர்த்து எழு - நெருங்கி எழுந்துள்ள; பொலங்கொடி இலங்கை - அழகிய கொடியைப் பெற்ற இலங்கையில்; பூழியோடு - புழுதியுடனே; ஆர்த்து எழு கழுது - ஆரவாரித்து எழுகின்ற பேய்களை; இரைத்து - கொக்கரித்து; ஆட - ஆடுவதை; காண்டி - பார்ப்பாயாக. ஆல் - அசை. பூழி- புழுதி. தூசு - ஆடை. மேக மண்டலம் வரை உள்ள கொடி என்க. கொடியாடிய இலங்கையில் பேயாடும் நிலை வரப் போகிறது. என்றதால் இலங்கையின் அழிவு பேசப்படுகிறது என்க. (62) |