| 5407. | 'நீல் நிறஅரக்கர்தம் குருதி நீத்தம் நீர் வேலை மிக்கு,ஆற்றொடு மீள, வேலை சூழ் ஞாலம் முற்றுறுகடையுகத்து நச்சு அறாக் காலனும்,வெறுத்து, உயிர் காலக் காண்டியால். |
நீல்நிறம் -நீலநிறத்தைப் பெற்ற; அரக்கர் தம் - அரக்கர்களின்; குருதி நீத்தம் - இரத்த வெள்ளம்; நீர் வேலை மிக்கு - நீரை உடைய கடலினும்மிகுந்து (அதனால்) அது; ஆற்றொடு மீள - ஆற்றுடன் திரும்ப (அதுபோல); வேலை சூழ் - கடலால் சூழப்பெற்ற; ஞாலம் முற்றுறு - உலகம் முடிவடையும்; கடையுகத்து - யுகத்தின் முடிவிலே (அனைத்தையும் உண்டு); நச்சு அறாக் காலனும் - கொலைவிடத்தன்மை நீங்காத யமனும்; வெறுத்து - (அரக்கரை உண்டு) தெவிட்டிப் போய்; உயிர்கால - உண்ட உயிர்களைக் கக்குதலைக்; காண்டி - காண்பாயாக. கடலில் இரத்தவெள்ளம் அதிகரித்தது. அது ஆற்றுவழியாகத் திரும்பிற்று. அதுபோல் காலன் தெவிட்டியதால் உயிர்களைக் கக்கினான் என்க. கடல் ஆற்றின் வழியே இரத்தத்தை வெளியே தள்ளிற்று; யமன் வாய் வழியே உயிரைக் கக்கினான். உயிர்கால - பெருமூச்சுவிட. அதிகம் உண்டமையால் எமன் பெருமூச்சு விட்டான் என்பாரும் உளர். காலன் - யமனின் ஏவல் செய்வோன் என்பாரும் உளர். காலன் கூற்றத்திற்கு ஏவல் செய்பவனும் ஆம் என்று இனியர் வரைந்தார். (சீவக 1477) ஞான வாசிட்டம், காலன் எவற்றிற்கும் அடங்காதவன் என்று பேசும். நச்சு - விடம். (63) |