5409. | 'செப்புறல் என் பல ? தெய்வ வாளிகள், இப் புறத்துஅரக்கரை முருக்கி ஏகின, முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால், அப் புறத்துஅரக்கரும் அவியக் காண்டியால். |
பல செப்புறல் -பலவற்றைக் கூறுவதால்; என் - என்ன பயன் விளையும்; தெய்வ வாளிகள் - (இராமபிரானின்) கடவுள் தன்மை பெற்ற அம்புகள்; இப்புறத்து - இந்த உலகில் உள்ள; அரக்கரை முருக்கி - அரக்கர்களை அழித்து; ஏகின - அப்பாலும் போய்; புறத்து - வெளியில் உள்ள; முவ்வுலகையும் - மூன்று உலகங்களையும்; முடிக்க - தாக்குவதாலே; அப்புறத்து அரக்கரும் - அந்தப் பக்கத்தில் உள்ள அரக்கர்களும்; அவிய - அழிவதை; காண்டி - பார்ப்பாயாக. இராமபிரானின்அம்புகள் இந்த உலக அரக்கர்களைக் கொன்று அப்பாலும் போய் முட்டுவதால் அப்பக்கத்தில் உள்ள அரக்கர்களும் அழிவதைப் பார்ப்பாயாக. தெய்வ வாளி - என்பதற்கு விதிபோலும் அம்பு என்றும் பொருள் கூறலாம். தெய்வ வாளி ஆகையால் தீயவர் உள்ள இடத்தை அறிந்து அவர்களைத் தண்டித்தன. முட்டல் - தாக்குதல். ஏகின என்னும் முற்று வினை எச்சப் பொருளில் வந்தது. ஆல் - அசை. (65) |