5413. | 'மத்து உறுதயிர் என வந்து சென்று, இடை தத்துறும்உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து, நின்பிரிவினில் பிறந்த வேதனை, எத்தனை உள ?அவை எண்ணும் ஈட்டவோ ? |
மத்து உறுதயிர்என - மத்தால் கடையப்படும்தயிர்போல; வந்து - உடலுக்குள் வந்தும்; சென்று - வெளியே சென்றும்; இடை - (ஆசைக்கும் கவலைக்கும்) நடுவில்; தத்துறும் - தடுமாற்றம் அடையும்; உயிரொடு - உயிருடனே; புலன்கள் தள்ளுறும் - ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற; பித்து - பித்தநிலையும்; நின் பிரிவினில் பிறந்த - நின் பிரிவாலேதோன்றிய;வேதனை - வேதனையும்; எத்தனை உள - எவ்வளவு இருக்கின்றன; அவை எண்ணும் ஈட்டவோ -அவ்வேதனைகள் அளவிடக்கூடிய தன்மையுடையனவோ. பித்து -பற்றின் மிகுதியால் உண்டாகும் உன்மத்த நிலை. கடையும் போது தயிர்படும் கலக்கத்தைக் கவிஞர்கள் பலபடியாகப் பேசுவர். மதிக்க அலைப்புண்ட வெண் தயிர் போல மறுகுறும் என் மதிக் கவலை என்பர் பிள்ளைப் பெருமாள். உயிரையும், புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து என்றதால் பெருமானின் காதல் வரம்பு புலனாகிறது. ஈடு - தன்மை. எண்ணுதல் - அளவிடுதல். (69) |