| 5415. | 'தீர்த்தனும், கவிக் குலத்து இறையும், தேவி ! நின் வார்த்தை கேட்டுஉவப்பதன் முன்னர், மாக் கடல் தூர்த்தன,இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு ஆர்த்தது கேட்டு,உவந்து இருத்தி, அன்னை ! நீ. |
தேவி - தெய்வத்தன்மையுடையவளே; அன்னை - தாயே !; நீ - நீ; தீர்த்தனும் - தூய்மையுடைய இராமபிரானும்; கவிக்குலத்து இறையும் - குரங்குகளின்தலைவனான சுக்கிரீவனும்; நின் வார்த்தை கேட்டு - உன்னுடைய சொற்களைக் கேட்டு; உவப்பதன் முன்னர் - மகிழ்ச்சியடைவதற்கு முன்பே; மாக்குரங்கு - பெரிய குரங்குக் கூட்டம்; மாக்கடல் தூர்த்தன - கரிய கடலை மேடு பண்ணி (அதன் வழியே வந்து); இலங்கையைச் சூழ்ந்து - இலங்கையை முற்றுகை இட்டு; ஆர்த்தது - ஆரவாரிப்பதை; கேட்டு - செவியில் ஏற்று; உவந்து இருத்தி - மகிழ்ச்சியுடன் இருப்பாயாக. இராமன் உன்மொழி கேட்டு மகிழ்வதன் முன் நீ, குரங்குகளின் ஆரவாரம் கேட்டு மகிழ்க. தீர்த்தன் - திருமால். இங்கு அச் சொல் இராமபிரானைக் குறிக்கிறது. தீர்த்தன் என்று அறிந்ததோ (திருவவதாரம் 114) இறை - அரசன். மன்னவன் மக்கட்கு இறை (திருக்குறள்) ஆர்த்தது - தொழிற் பெயர் மாக்கடல் கருங்கடல். பெருங்கடல் என்றும் கொள்ளலாம். ஆழ்கடல் என்பதே பலபிரதிகளில் காண்கின்றது. இப்பாடலை விரைவு நவிற்சியணி என்று கூறி அலங்கார சாத்திரத்தை விரிவுபடுத்தலாம். (71) |