5418.

'குரா வரும் குழலி ! நீ குறித்த நாளினே,
விராவு அரு நெடுஞ்சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும்பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்;இவன் இராமன்' என்றனன்.

     குராவரும் குழலி -குரவ மலர்அணிந்த கூந்தலுடைய அம்மையே !;
நீ குறித்த நாளில் - நீ குறிப்பிட்டுக் கூறிய நாட்களுக்குள்; விராவு அரு -
எவரும் அணுக முடியாத; நெடுஞ்சிறை - பெரிய சிறையிலிருந்து; மீட்கிலான்
எனில் -
(இராமபிரான்) உன்னை மீட்காமல் போனால்; பரா வரும் - பரவி
வருகின்ற; பழியொடு பாவம் - பழியும் பாவமும்; பற்றுதற்கு - பிடிப்பதற்கு;
அவன் -
அந்த இராமபிரான்; இராவணன் - இராவணன் ஆவான்; இவன் -
இந்த இராவணன்; இராமன் - இராமன் ஆவான்; என்றனன் - என்று
(அனுமன்) கூறினான்.

     குரா - குரவம்(ஒருவகை மரம்) உன்னை மீட்காவிடில் இராவணனைச்
சார வேண்டிய பாவம் இராமனைப் பற்றும் என்றனன். மேலே. 39 ஆம்
பாடலின் (தோன்றா எழுவாயாக இருந்த) அனுமன் என்றனன் என்னும்
பயனிலை கொண்டது.                                      (74)