5420.

'சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம்
வேறி; யான் இனிஒன்றும் விளம்பலென்; மேலோய் !
கூறுகின்றன, முன்குறி உற்றன, கோமாற்கு
ஏறும்' என்று,இவை சொல்லினள் இன்சொல்
                                இசைப்பாள்;

     இன்சொல்இசைப்பாள் - இனிய சொற்களைப் பேசும் பிராட்டி;
(அனுமனை நோக்கி) ஐய ! - தந்தையே; மேலோய் - மேலானவனே !;
விரைந்தனை சேறி - விரைந்து செல்வாயாக; தீயவை எல்லாம் -
எல்லாவிதமான தீமைகளையும்; வேறி - வெல்வாயாக; யான் - நான், இனி-
இப்போது; ஒன்றும் விளம்பலென் - ஒன்றையும் கூற மாட்டேன்;
கூறுகின்றன - இப்போது என்னாற் கூறப்படுபவை; முன் உற்றன குறி -
முன்பு நிகழ்ந்த அடையாளங்கள் (இ ஃது); கோமாற்கு ஏறும் - இராமபிரான்
மனத்திற் பதியும்; என்று - என்று; இவை சொல்லினள் - இவற்றைக்
கூறினாள்.

     வெல்தி என்பதுவேறி என்றும் செல்தி என்பது சேறி என்றும் வந்தன.
ஏறும் - மனத்தில் பதியும். குறி - அடையாளம். இசைப்பாள் என்பது
பிராட்டியைக் குறிக்கிறது.                                    (76)