5425. | 'மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான், அஞ்சலன்' என,வெங் கண் அரக்கர் அயிர்த்தார்; சஞ்சலம் புரிசக்கரவாகமுடன், தாழ் கஞ்சமும்,மலர்வுற்றன; காந்தின காந்தம். |
மஞ்சு - மேகத்திடையே; அலங்கு - அசைந்து செல்லும்; ஒளியோனும்- சூரியனும்; இம் மாநகர் - இந்த இலங்கைக்கு; வந்தான் - வந்துவிட்டானோ (இனி சூரியன்); அஞ்சலன் - பயப்படமாட்டான்; என - என்றுகூறி; வெங்கண் அரக்கர் - கொடிய கண்களைப் பெற்ற அரக்கர்கள்; அயிர்த்தார் - ஐயுற்றனர் (அவ்வொளியால்); சஞ்சலம்புரி - மனச்சஞ்சலம் பெற்ற; சக்கர வாகமுடன் - சக்கரவாகப் பறவையுடன்; தாழ் - கூம்பித் தாழ்வுற்ற; கஞ்சமும் - தாமரைகளும்; மலர்வுற்றன - மலர்ச்சி பெற்றன; காந்தம் - சூரிய காந்தக் கற்கள்; காந்தின - ஒளியை வெளிப்படுத்தின. மஞ்சு - மேகம்.மஞ்சு நிகர் குந்தளமின்னே (காவடிச்சிந்து) இராவணனுக்கு அஞ்சிய சூரியன் இலங்கைக்கு வந்து விட்டான் பகைவர்கள் வருவர் என்பது குறிப்பு. சக்கரவாகம், பகலில் பெடையுடன் கூடி மகிழும். சூடாமணி ஒளி பகல்போல ஒளி வீசியது. அதனால் சக்கர வாகம் மலர்ந்தன. இனி, பிராட்டி பெருமானை அடைவாள் என்பது குறிப்பு. சஞ்சலம் - கலக்கம். (81) |