5432.

'கண்டநிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல்அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள்மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறைவைத்திடுதலில் குறையும்
                            உண்டோ ?

     வலத்தால் -என்வலிமையினால்; கண்டநிருதக்கடல் - கண்ணுக்குத்
தெரிகின்ற அரக்கர் கூட்டத்தை; கலக்கினென் - கலங்கச் செய்தவனாய்;
திண்திறல் அரக்கனும் இருக்க - மிக்க வலிமை உடைய அரக்கனாகிய
இராவணனும் பார்த்துக் கொண்டிருக்க; ஓர் திறத்தின் - ஒப்பற்ற எனது
ஆற்றலினால்; மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்து - (அவனது
பட்டத்து அரசியான) மண்டோதரியின் மலரணிந்த கூந்தலைப் பற்றி;
சிறைகொண்டு வைத்திடுதலில் - சிறையாகக் கொண்டு வைப்பதில்; குறையும்உண்டோ - குறைவு உள்ளதோ ? (இல்லை என்றபடி)

     இராவணனைச்சிறைவைத்தலை விட அவன் மனைவியைச் சிறையில்
அடைத்தலே நிறைவானதாக இருக்கும் எனக் கருதுகின்றான்,
 அனுமன்,
மிகுதியையும்பெருமையையும் குறிக்க. அரக்கர் கூட்டம் கடல் எனப்பட்டது.
அரக்கர் கூட்டத்தைக் கடல் என்றதற்கு ஏற்பக் கலக்கி என்ற சொல்
பொருத்தமாக வந்தது. மண்டோதரி மந்த உதரத்தவள். சுருங்கிப் படிந்த
வயிற்றினள் என்று பொருள்.                                  (4)