5440. | அலைந்தனகடல் திரை; அரக்கர் அகல் மாடம் குலைந்து உகஇடிந்தன; குலக் கிரிகளோடு மலைந்து பொடிஉற்றன; மயங்கி நெடு வானத்து உலைந்து விழும்மீனினொடு வெண் மலர் உதிர்ந்த. |
கடல் திரைஅலைந்தன - (அனுமன் எறிந்தமரங்களினால்) கடலின் அலைகள் அலைவனவாயின; அரக்கர் அகல் மாடம் - அரக்கருக்குரிய பெரிய மாளிகைகள்; குலைந்து உக இழந்தன - நிலை கெட்டுச் சிதறிச் சிந்தும்படி இடிந்து போயின; குலக் கிரிகளோடு மலைந்து பொடி உற்றடை - (அனுமன் எறிந்த சில மரங்கள்) ஏழுகுலப் பருவதங்களோடு மோதிப் பொடியாய்ச் சிந்தின; வெண் மலர் - மரங்களில் உள்ள வெள்ளிய பூக்கள்; நெடுவானத்து உலைந்து விழும் மீனினொடு - பெரிய ஆகாயத்தினின்றும் நிலை கலங்கிக் கீழே விழக்கூடிய நட்சத்திரங்களோடு; மயங்கி உதிர்ந்த - கலந்து கீழே சிந்தின. அனுமனால் வீசிஎறியப்பட்ட மரங்கள் ஆகாயத்தில் தாக்கின. தாக்கப்பட்ட நட்சத்திரங்களோடு, மரங்களிலிருந்த வெண்ணிறப் பூக்கள் வேற்றுமை தெரியாமல் மயங்கிக் கீழே உதிர்ந்தன. விண்மீனுக்கு வெள்ளை மலர் ஒப்பு. (12) |