5444. | புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும், கள்ளும்,முகையும், தளிர்களோடு இனிய காயும், வெள்ள நெடுவேலையிடை, மீன்இனம் விழுங்கித் துள்ளின; மரன்பட, நெரிந்தன துடித்த. |
புள்ளினொடுவண்டும் மிஞிறும் - (எறியப்பட்டமரங்களில் உள்ள) பறவைகளையும் வண்டுகளையும் மிஞிறுகளையும்; கடி கொள் பூவும் - நறுமணம் உள்ள மலர்களையும்; முகையும் கள்ளும் - அரும்புகளையும் தேனையும்; தளிர்களோடு இனிய காயும் - துளிர்களையும் இன் சுவையுள்ள காய்களையும்; வெள்ள நெடு வேலையிடை - நீர்ப்பெருக்கை உடைய பெரிய கடலிலே; மீன் இனம் விழுங்கித் துள்ளின - உள்ள மீன் கூட்டங்கள் உட்கொண்டு (மனக்களிப்பால்) துள்ளிக் குதித்தன; மரன்பட நெரிந்தன துடித்த - (பிறகு) வீழ்ந்த மரங்கள் தம் மேற்பட்டுத்தாக்குவதால் நசுங்கினவாகித் துடிக்கலாயின. கடலில் விழுந்தபறவை முதலியவற்றை உண்டு மகிழ்ந்த மீன்கள். பிறகு மரங்களின் தாக்குதலால் நெரிந்து துடித்தன. இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை. இத்தத்துவம் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. தேன்; மிஞிறு - தேனீ. (புறம் 12) (16) |