5449.

தேன் உறைதுளிப்ப, நிறை புள் பல சிலம்ப,
பூ நிறை மணித்தரு விசும்பிடை போவ,
மீன் முறைநெருக்க, ஒளி வாளொடு வில் வீச,
வானிடை நடாயநெடு மானம் எனல் ஆன.

     தேன் உறைதுளிப்ப - தேன் துளிகள்சிந்தவும்; நிறை புள்பல
சிலம்ப -
அங்கு நிறைந்து வாழ்ந்து வந்த பறவைகள் ஒலிக்கவும்; பூ நிறை
மணித் தரு -
மலர்கள் நிறைந்த இரத்தினமயமான மரங்கள்; விசும்பின்
இடை போவ -
ஆகாயத்தினிடத்தே போவனவாய்; மீன் முறை நெருக்க -
(அவ் விண்ணில் உள்ள) நட்சத்திரங்கள் முறையே  நெருக்கவும்; ஒளி
வாளொடு வில் வீச -
ஒளியானது வாளொடு போட்டியிட்டு ஒளி வீசவும்;
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆய -
ஆகாயத்தில் செல்லும்
பெரிய விமானம் என்று சொல்லத்தக்கனவாயின.

     அனுமன் வீசிஎறிந்த மரங்களில் உள்ள பூக்களும், அவற்றில் உள்ள
மணிகளும்  வீசும் ஒளி வாள் போல, விளங்கின. மானம் - விமானம்; முதற்
குறை.                                                   (21)