கலிவிருத்தம் (வேறு வகை) 5451. | ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர், ஞானம் முற்றுபுநண்ணினர் வீடு என, தான கற்பகத்தண்டலை விண்தலம் போன, புக்கன,முன் உறை பொன்னகர். |
ஊனம் உற்றிட -குற்றம்நேர்ந்திட்டதனால்; மண்ணில் உதித்தவர் -இந்த மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள்; ஞானம் முற்றுபு - பிறகு ஞானம் முழுமையாக நிரம்பியவுடன்; வீடு நண்ணினர் என - துறக்கத்தை அடைந்தவர்களைப் போல; தான கற்பகத் தண்டலை - கொடைக்குணம் பெற்ற கற்பக மரங்கள் அடர்ந்த அந்த அசோகவனச் சோலை; விண்தலம் போன - அனுமனால் வீசி எறியப்பட்டு வான் வழியாகச் சென்று; முன் உறை பொன் நகர்புக்கன - முன்னே தங்கியிருந்த சுவர்க்க லோகம் போய்ச் சேர்ந்தன போல் தோற்றம் அளித்தன. அசோகவனத்துக்கற்பக மரங்கள், துறக்கத்திலிருந்து இராவணனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவைகள். அவைகள் அனுமனால் வீசி எறியப்பெற்று, முன் இருந்த இடத்தை அடைந்து விட்டன. விண்ணுலகத் தேவர் குற்றம் செய்து மண்ணுலகில் பிறந்து, ஞானம் முற்றி மீண்டும் விண்ணுலகம் அடைந்ததுபோல அனுமன் எறிந்த அசோக வனத்து மரங்கள் ஆகாயத்தை அடைந்தனவாம். கவந்தன், விராதன், வீடுமன் முதலியோர் சாபக் கேட்டால் தம் தேவபதம் நீங்கியார் மண்ணுலகில் பிறந்து ஞானம் முற்றிய பின் தம் முன்னைய உயர் நிலையைப் பெற்ற புராணச் செய்தி இங்கு நினைக்கத்தகும். (23) |