5452.

மணி கொள்குட்டிமம் மட்டித்து, மண்டபம்
துணி படுத்து,அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த்தலம் சிந்தி, செயற்கு அரும்
பணி படுத்து,உயர் குன்றம் படுத்துஅரோ;

     மணிகொள்குட்டிமம் மட்டித்து - இரத்தினங்கள்பதிக்கப் பெற்ற
திண்ணைகளைத் தகர்த்து; மண்டபம் துணிபடுத்து - மண்டபங்களைத் துண்டுதுண்டுகளாக உடைத்து; அயல் வாவிகள் தூர்த்து - பக்கத்தில்
உள்ளதடாகங்களைத் தூர்த்து; ஒளிர் திணி சுவர்த்தலம் சிந்தி - ஒளி
விளங்குகின்ற வலிய சுவர்களின் இடங்களை இடித்துத்தள்ளி; செயற்கு அரும்
பணி படுத்து -
செய்வதற்கு அரிய வேலைப்பாடு அமைந்த பொருள்களை
எல்லாம் அழித்து; உயர் குன்றம் படுத்து - உயர்ந்த குன்றுகளையும்
அழித்து.

     இதுவும் அடுத்தசெய்யுளும் குளகம். குட்டிமம் - கல்லால் அமைந்த
மேடை; குன்றம் - செய்குன்று; சோலையில் செயற்கை அழகில் அமைந்த
கட்டிடங்கள் முதலியன அழிக்கப்பட்டன என்பதாம்.                 (24)