5454.

சந்தனங்கள் தகர்ந்தன-தாள் பட,
இந்தனங்களின்வெந்து எரி சிந்திட,
முந்து அனங்கவசந்தன் முகம் கெட,
நந்தனங்கள்கலங்கி நடுங்கவே.

     அனங்கன் முந்துவசந்தன் முகம்கெட - மன்மதனுக்கு முன்னே
வரும் அவன் நண்பனான வசந்தனுடைய முகம் பொலிவு இழக்கவும்;
நந்தனங்கள் கலங்கி நடுங்க - வானில் உள்ள பூஞ்சோலைகள் போல
குலைந்து நடுக்க முறவும்; தாள் பட தகர்ந்தன சந்தனங்கள் - அனுமனின்
கால்பட்டதால் தகர்த்து எறியப் பட்ட சந்தன மரங்கள்; இந் தனங்களின்
வெந்து எரி சிந்திட -
விறகுகளைப் போல எரிந்து நெருப்பைக்கக்கவும்.

     நந்தனம் -தேவர் உலகத்தில் உள்ள பூஞ்சோலை; அசோகவனத்துச்
சந்தன மரங்களின் நெருப்பு நந்தனங்களில் இருந்த வசந்தன் முகத்துப்
பொலிவை அழித்தது. வசந்தன் - வசந்த காலத்துக்குரிய தேவன்; மன்மதனின்
தோழன் என்பது புராண வழக்கு. அனங்க வசந்தன் எனக் கொண்டு
அனங்கனாகிய வசந்தன் என இருபெயரொட்டாக்கி மன்மதனையே
குறித்ததாகவும் கொள்ளலாம்.                                (26)