5456.

குழையும்,கொம்பும், கொடியும், குயிற்குலம்
விழையும் தண்தளிர்ச் சூழலும், மென் மலர்ப்
புழையும், வாசப்பொதும்பும், பொலன் கொள் தேன்
மழையும்,வண்டும், மயிலும், மடிந்தவே.

     குழையும்கொம்பும் - வளையும் தன்மையுள்ளசிறு கிளைகளும்;
கொடியும் - மலர்க்கொடிகளும்; குயில் குலம் விழையும் தண் தளிர்ச்
சூழலும் -
குயில்களின் கூட்டம் விரும்பக் கூடிய குளிர்ந்த தளிர்கள் அடர்ந்த
இடங்களும்; மென் மலர்ப் புழையும் - மென்மையான மலர்களைக் கொண்ட
நுழைவாயிலும்; வாசப் பொதும்பும் - மணமிக்க புதர்களும்; பொலன்
கொள்தேன் மழையும் -
பொன்னிறம் கொண்ட தேன் மழையும்; வண்டும்,
மயிலும் மடிந்த  -
வண்டுகளும், மயில்களும் அழிந்து போயின.

     மென் மலர்ப்புழையும் - மெல்லிய பூவின் துளையும் என்பது ஒரு
பழைய உரை.                                                (28)