5457.

பவள மாக்கொடி வீசின, பல் மழை
துவளும் மின் என,சுற்றிட; சூழ் வரை,
திவளும் பொன்பணை மா மரம் சேர்ந்தன,
கவள யானையின்ஓடையின் காந்தவே.
   

     வீசின பவளமாக்கொடி - அனுமனால் வீசி எறியப்பட்ட பவளம்
போன்று சிவந்த கொடிகள்; பல் மழை துவளும் மின் என - பல
மேகங்களில் துவண்டு தோன்றும் மின்னல்கள் போல; சூழ் வரை சுற்றிட -
இலங்கையைச் சூழ்ந்திருந்த மலைகளில் சுற்றிக் கொள்ள; சேர்ந்தன திவளும்
பொன் பணை மாமரம் -
எறியப்பட்டு மலைகளைச் சேர்ந்தனவான,
விளங்குகின்ற பொன் மயமான கிளைகளை உடைய பெரிய மரங்கள்; கவள
யானையின் ஓடையின்
 காந்த - பெரிய உருண்டைகளாகத்தன் உணவை
உண்ணும் யானையின் முக படாம் போல ஒளி வீசி விளங்க.

     மலைகளைச்சுற்றிக் கொடிகள் மேகங்களில் தோன்றும் மின்னலைப்
போன்றன. சுற்றி அமைந்த மரங்கள் யானையின் முக படாம் போன்றன. ஓடை
- யானையின் முகத்தில் அழகுக்காக மூடப்படும் முகபடாம்.           (29)