5461.

தாமரைத்தடம் பொய்கை, செஞ் சந்தனம்-
தாம் அரைத்தனஒத்த; துகைத்தலின்,
காமரம் களிவண்டொடும், கள்ளொடும்,
காமர் அக்கடல், பூக் கடல் கண்டவே.

     உகைத்தலின் -அனுமன்பலவகை மரங்களை வீசி எறிந்ததனால்;
தாமரை தடம் பொய்கை - தாமரை மலர்கள் நிறைந்த பெரிய தடாகம்; செம்சந்தனம் தாம் அரைத்தன ஒத்தது - சிவந்த சந்தனக்கட்டையை
அரைத்துக்கரைக்கப்பட்டன போல் தோன்றிற்று; காமரம் - (அன்றியும்)
சோலையின்மரங்கள்; காமர் அம் கடல் - தாம் வீழப் பெற்ற அழகிய அந்த
உவர்க்கடலை; காமரம் களி வண்டொடும் கள்ளொடும் - காமரம் என்னும்
பண்பாடிக் களிக்கும் வண்டுகளோடும் தேனோடும் கூடி; பூக் கடல் கண்ட -
மலர்களால் இயன்ற கடலாகச் செய்தன.

      அனுமன் வீசிஎறிந்த மரங்களால் தாமரைத்தடாகம் சந்தனக்
குழம்பாயிற்று; உவர்க்கடல் மலர்க்கடலாயிற்று. கா - சோலை; காமரம் - ஒரு
வகைப் பண்.                                            (33)