5464. | புல்லும் பொன் பணைப் பல் மணிப் பொன் மரம், 'கொல்லும் இப்பொழுதே' எனும் கொள்கையால், எல்லில் இட்டுவிளக்கிய இந்திரன் வில்லும் ஒத்தன,விண் உற வீசின. |
விண் உற வீசின- (அனுமனால்) ஆகாயத்தில் சேருமாறு வீசி எறியப்பட்டனவும்; பொன் பணை புல்லும் - பொற் கிளைகள் பொருந்தப் பெற்றனவும்; பல் மணி பொன் மரம் - பல வகை இரத்தினங்களால் இயன்று அழகு பொருந்தியனவுமாகிய மரங்கள்; இப்பொழுதே கொல்லும் எனும் கொள்கையால் - இந்த அனுமன் இப்பொழுதே இலங்கையை அழித்து விடுவான் என்ற குறிப்பால்; எல்லில் இட்டு விளக்கிய - இரவு நேரத்தில் (உத்பாதமாக) உண்டாக்கி விளங்கச் செய்த; இந்திரன் வில்லும் ஒத்தன - வானவில்லைப் போன்றன ஆயின. இரவில் வானவில்தோன்றுவது. அழிவின் அறிகுறி. அனுமன் வீசி எறிந்த மரங்கள் இந்திர வில் போன்று ஒளி விட்டு விளங்கின. எல் - இரவு. இந்திரவில் - வானவில். (36) |