5467.

பெரிய மாமரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின்,மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம்நெருப்பு எழ, நீறு எழ,
இரியல்போன,இலங்கையும் எங்கணும்.

     பெரிய மா மரமும்- மிகப்பெரிய மரங்களையும்; பெரும் குன்றமும்
-
பெரிய மலைகளையும்; விரிய வீசலின் - பிளவுபடும்படி (அனுமன்) வீசி
எறிந்ததனால்; மின் நெடும் பொன் மதில் நெரிய - பேரொளி கொண்ட
நீண்ட பொன் மதில்கள் நெரிந்து தூளாகவும்; மாடம் நெருப்பு எழ நீறு எழ
-
மாளிகைகள் நெருப்புத் தோன்றிச் சாம்பலாகப் போகவும்; இலங்கையும்
எங்கணும் இரியல் போன -
இலங்கை அரக்கர் கூட்டங்கள் நிலை கெட்டு
எல்லா இடங்களிலும் ஓடின.

     இலங்கைஆகுபெயரால் இலங்கையில் வாழ்ந்த அரக்கர் கூட்டங்களைக்
குறித்தது.                                                    (39)