சந்திரன் மறைதல்

                 அறுசீர்ஆசிரிய விருத்தம்   

 5468.

' "தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால்
                           என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர்கண் முன்னே விரி பொழில்
                           இறுத்து வீசக்
கண்டனைநின்றாய்" என்று, காணுமேல், அரக்கன்
                                   காய்தல்
உண்டு' எனவெருவினான்போல், ஒளித்தனன்,
                           உடுவின் கோமான்.

     தொண்டை அம்கனி வாய்ச் சீதை துயக்கினால் - கொவ்வைக் கனிபோன்ற அழகிய வாயையுடைய சீதையிடம் கொண்ட தொடர்பால்
(நிமித்தமாக); என்னைச் சுட்டாய் - என்னை நெருப்பு போல் சுட்டு
வருத்தினாய்; விண்ட வானவர் கண் முன்னே - என்னிடத்துப் பகைமை
கொண்ட தேவர்களின் கண்ணுக்கு எதிரில்; விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய் -
பரந்த சோலையை (ஒரு குரங்கு) முறித்து அழிக்கவும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாய்; என்று - என்று  நினைத்து; அரக்கன்
காணு மேல் காய்தல் உண்டு என -
அரக்கனாகிய இராவணன்
காண்பானேல் தன்னை வருத்துதல் செய்யக்கூடும் என்று கருதி; வெரு
வினான் போல் -
அஞ்சினவனைப் போல; உடுவின் கோமான் ஒளித்தனன்- நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் மறைந்தான்.

     சந்திரன்இராவணனுக்கு அஞ்சி மறைந்ததாகக் கூறியது ஏதுத்
தற்குறிப்பேற்ற அணி. நட்சத்திரங்களுக்கு நாயகன் என்று திங்களைக் குறிப்பது
புராணக் கற்பனை. காதல் வேதனையுறும்போது சந்திரன் சுடுவான் என்பது
கவிமரபு. துயக்கு - தொடர்பு; (சம்பந்தம்) திருமகள் அம்சமான சீதைக்கும்
சந்திரனுக்கும் அமுதத்துடன் தோன்றியதனால் உடன் பிறப்புச் சம்பந்தம். (40)