அனுமன் செயலால்உலகெங்கும் ஒளி வீசல் 5469. | காசு அறுமணியும், பொன்னும், காந்தமும், கஞல்வது ஆய மாசு அறு மரங்கள்ஆகக் குயிற்றிய மதனச் சோலை, ஆசைகள்தோறும்,ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய,விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம். |
காசு அறு மணியும்பொன்னும் - குற்றம் இல்லாதஇரத்தினங்களும் தங்கமும்; காந்தமும் கஞல்வது ஆய - சூரிய காந்தம், சந்திர காந்தம் என்னும் கற்களும் (ஆகிய இவற்றால்) விளங்குவதான; மாசுஅறு மரங்கள் ஆகக் - குற்றமற்ற மரங்களாக; குயிற்றிய - இழைத்து அமைத்த; மதனச் சோலை - மன்மதனுக்கு இருப்பிடமான அசோகவனச் சோலை மரங்கள்; ஆசைகள் தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய விளக்கலாலே - எல்லாத் திக்குகளிலும் அனுமன் தன் இருகைகளாலும் வாரி வாரி வீசப்பட்டன வாய் ஒரு பெரிய ஒளியைச் செய்தமையால்; உலகம் எல்லாம் விளங்கின - உலகம் முழுவதும் அந்த இருளில் நன்கு விளங்கின. சந்திரன்மறைந்த பிறகு, ஏற்பட்ட இருள், வீசப்பட்ட மணி ஒளி மிக்க மரங்களின் ஒளியால் அகன்றது. உலகு ஒளியுடன் விளங்கியது. ஆசை - திசை; காம உணர்வு தோன்றுதற்கு ஏற்ப இராவணனால் அமைக்கப்பட்டது ஆதலின் மதனச் சோலையாயிற்று. (41) |