| 5471. | தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும் தொடுத்த புள் தம் கூட்டொடும்துறக்கம் புக்க, குன்று எனக் குவவுத் திண் தோள் சேட்டு அகன்பரிதி மார்பன் சீறியும் தீண்டல்தன்னால்; மீட்டு, அவன்கருணைசெய்தால், பெறும் பதம் விளம்பலாமோ ? |
குன்று எனக்குவவுத் திண்தோள் - மலை போன்று திரண்ட தோள்களை உடைய; சேடு அகல் பிரிதி மார்பன் - அழகினால் பரந்து சூரியன் போன்ற மார்பை உடைய அனுமன்; சீறியும் தீண்டல் தன்னால் - கோபித்த போதும் தன் கைகளால் தொட்ட சிறப்பினால்; தெய்வ மரம் தொறும் - அங்கிருந்த தெய்வத் தன்மை வாய்ந்த மரங்களில் எல்லாம்; தோட்டொடும் துதைந்த தம் கூட்டொடும் - இலைகளோடு நெருங்கியனவாய்த் தொகுத்து அமைக்கப் பெற்ற தமது கூடுகளுடன்; புள் துறக்கம் புக்க - பறவைகள் சுவர்க்கம் போய்ச் சேர்ந்தன; மீட்டு அவன் கருணை செய்தால் - இவ்வாறன்றி, அந்த அனுமன் அருள் புரிந்தால்; பெறும் பதம் விளம்பல் ஆமோ ? - அடையக் கூடிய நற்பதவியை நம்மால் சொல்ல முடியுமா ? (முடியாது) மிகப் பெரும் பதவி கிடைக்கும். அனுமன்சினத்தால் தீண்டியே, பறவைகளுக்கு சுவர்க்கம் கிடைத்தது. அருள் செய்தால் எவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும் ? என்பது கருத்து. சேடு - அழகு; இளமையும் ஆம். (43) |