அசோகவனத்தைஅழித்து நின்ற அனுமன் நிலை | 5474. | தாழ் இரும்பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு தமியன் நின்றான், ஏழினொடு ஏழுநாடும் அளந்தவன் எனலும் ஆனான்; ஆழியின் நடுவண்நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்; ஊழியின் இறுதிக்காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான். |
தாழ் இரும்பொழில்கள் எல்லாம் துடைத்து - தழைத்த பெரும் சோலை முழுவதையும் அழித்து; ஒரு தமியன் நின்றான் - தன்னந்தனியனாய் நின்ற அனுமன்; எழினோடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் - பதினான்கு உலகங்களையும் (தனது இரண்டு திருவடிகளாலும்) அளந்து கொண்ட திருவிக்கிரம மூர்த்தி என்று சொல்லத்தக்கவனாகவும் இருந்தான்; ஆழியின் நடுவண் நின்ற அருவரைக்கு அரசும் ஒத்தான் - (அதுவன்றிப்) பாற்கடலின் நடுவே (மத்தாக) நின்ற அரிய சிறந்த மலையாகிய மந்தர மலையைப் போலவும் இருந்தான்; (மேலும்); ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான் - கற்பாந்த காலத்தில் உலகத்தை எல்லாம் அழித்திட்டு நிற்கும் உருத்திர மூர்த்தியைப் போலவும் இருந்தான். பெரிய வடிவாலும்அரக்கக் கடலைக் கடையவுள்ளமையாலும் முற்றும் அழித்தமையாலும் திருவிக்கிரமாவதாரம், மந்தரமலை, ஆகியவை உவமையாயின. (46) |