| 5476. | 'தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால், தூயவர் துணிதல்உண்டே, நும்முடைச் சூழல் எல்லாம் ? ஆய மான் எய்த,அம் மான், இளையவன், "அரக்கர் செய்த மாயம்" என்றுஉரைக்கவேயும், மெய்என மையல் கொண்டேன்,' |
தீயவர் தீயசெய்தல் - கொடியோர் செய்யும் தீய செயல்களை; தீயவர்தெரியின் அல்லால் - அவர் போன்ற கொடியரே தெரிந்து கொள்வரே தவிர;தூயவர் துணிதல் உண்டே - (என்னைப் போன்ற) நல்லவர்கள் அறிவர்என்று நிச்சயிக்க முடியுமா ? (முடியாது); எல்லாம் நும்முடைச் சூழல் -இவை எல்லாம் அரக்கர்களாகிய உங்களுடைய சூழ்ச்சியாகும்; ஆய மான்எய்த - (ஏனென்றால்) முன்பு காட்டில் மான் உருவில் வந்த மாரீசன் என்பக்கத்தில் வர; அம்மான் அரக்கர் செய்த மாயம் என்று இளையவன்உரைக்க வேயும் - அந்த மான், அரக்கர் செய்த மாயச் செயலால் வந்ததுஎன்று இலக்குவன் எடுத்துச் சொல்லிய போதும்; மெய் என மையல்கொண்டேன் - (அதனை) மெய்யான மான் என்றே (அறிவு மயக்கத்தால்)எண்ணி, அதன்மீது விருப்பம் கொண்டேன். 'மையல்கொண்டேன்' - என்றது அதனால் யான் இங்கு வந்து இ்த்துயரடையக் காரணமாயிற்று என்பதைக் குறிப்பிட்டபடி பிராட்டி தான் அறியாதவளாகவே உரைக்கின்றாள். சூழல் - சூழ்ச்சி, 'தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே' (திருவாய் மொழி 7.5.4) என மயக்கத்தின் இயல்பை நம்மாழ்வார் விளக்கியது காண்க. (48) |