அனுமன் ஓமமண்டபத்தைச் சிதைத்தல் 5477. | என்றனள்;அரக்கிமார்கள் வயிறு அலைத்து, இரியல்போகி, குன்றமும்,உலகும், வானும், கடல்களும், குலைய ஓட, நின்றது ஓர்சயித்தம் கண்டான்; 'நீக்குவல் இதனை' என்னா, தன் தடக் கைகள்நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான். |
என்றனள் -என்று,பிராட்டி அரக்கியர்களுக்கு மறுமொழி கூறினாள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகி - அக்காவல் அரக்கியர் வயிற்றில் அடித்துக் கொண்டு நிலை தடுமாறிச் சென்று; குன்றமும், உலகும், வானும் கடல்களும் குலைய ஓட - மலைகளும் இந்தப்பூவுலகும் வானமும் கடல்களும் தடுமாறும்படி ஓடியபோது; தன் தாதை ஒப்பான் - தன் தந்தையாகிய வாயு தேவனை ஒத்த வலிமையுடைய அனுமன்; நின்றது ஓர் சயித்தம் கண்டான் - அங்கு நிலை பெற்று விளங்கிய ஒரு ஓம மண்டபத்தைப் பார்த்து; 'இதனை நீக்குவல்' என்னா - இதை இவ்விடத்தை விட்டுப் பெயர்த் தெறிவேன்' என்று; தன் தட கைகள் - தனது பெரிய கைகளை; நீட்டி பற்றினன் - நீட்டி அதனைப் பற்றிக் கொண்டான். சயித்தம் -சைத்தியம் என்னும் வடமொழியின் தமிழ்வடிவம் ஓமம் வேள்வி முதலியன புரியும் மண்டபம். 'வானோங்கு சிமயத்து வாலொளி சயித்தம்' (மணி மேகலை 28:131) (49) |