அந்த மண்டபத்தின்பெருமை

5478.

கண் கொளஅரிது; மீது கார் கொள அரிது; திண்
                                   கால்
எண் கொள அரிது; இராவும் இருள் கொள அரிது;
                                   மாக
விண் கொளநிவந்த மேரு வெள்குற, வெதும்பி
                                   உள்ளம்
புண்கொள, உயர்ந்தது; இப் பார் பொறை கொள
                               அரிது போலாம்.

     கண் கொள அரிது- (அச்சயித்தம்) எவரும் தம் கண் பார்வை
கொண்டு அதன் முழு உருவத்தையும் காண இயலாதது; கார் மீது கொள
அரிது -
மேகங்களும் எட்டி, அதன் மேற்கொள்ள முடியாத அளவு
உயரமானது; திண்கால் எண் கொள அரிது - வலிய காற்றும் பற்றுவதற்கு
எண்ணவும் அரியது; இராவும் இருள் கொள அரிது - இராப் பொழுதும்
இருளினால் கொள்ள முடியாது; மாக விண்கொள நிவந்த மேரு - பெரிய
ஆகாயத்தைத் தனது இடமாகக் கொள்ளும்படி மேலோங்கி எழுந்த மேருமலை
கூட; வெதும்பி வெள்கு உற உள்ளம் புண் கொள உயர்ந்தது - வெட்கி,
மனம் நொந்து புண் அடையும் படி உயர்ந்து விளங்கியது; இப் பார்
பொறைகொள அரிது -
இந்தப் பூமியும் அதன் பெருஞ் சுமையைத்
தாங்குவது என்பது முடியாத செயல்.                    

     கார் கொள அரிது- மேக மண்டலத்துக்கும் மேலாக உள்ளது. கால்
கொள அரிது - வாயு மண்டலத்துக்கும் மேலானது. இருளாலும் மறைக்க
முடியாதது என்பதை இருள்கொள அரிது என்ற தொடர் விளக்கிற்று. போல்,
ஆம் - அசைகள்.                                            (50)