| 5480. | தூண் எலாம்சுடரும் காசு; சுற்று எலாம் முத்தம்; சொன்னம் பேணல் ஆம்மணியின் பத்தி, பிடர் எல்லாம்; ஒளிகள் விம்ம சேண் எலாம்விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கேயும் பூணலாம்;எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே. |
தூண் எலாம்சுடரும் காசு - (அந்தச்சயித்தத்தில் உள்ள) தூண்கள் யாவும் ஒளி விடும் மணிகளால் ஆனவை; சுற்று எலாம் முத்தம் சொன்னம் - அதன் சுற்றுப்பக்கமெல்லாம் (பிரகாரம்) முத்துக்களாலும் பொன்னாலும் இயன்றவை; பிடர் எலாம், பேணல் ஆம் மணியின் பத்தி - அதன் பின் பக்கமெல்லாம் விரும்பத்தக்க இரத்தினங்களின் வரிசையால் இயன்றவை; ஒளிகள் விம்ம - ஒளிகள் மிகுதலால்; சேண் எலாம் விரியும் கற்றை சேயொளிச் செல்வதற்கு ஏயும் - ஆகாயம் முழுவதும் பரவுகின்ற தொகுதியான சிவந்த ஒளியையே செல்வமாகக் கொண்ட சூரியனுக்கும் கூட; பூணல் ஆம் - ஆபரணமாக அணிவதற்கு உரியதாம் (ஆதலின்); எம் மனோரால் புகழல் ஆம் பொதுமைத்து அன்று - எம்மைப் போன்றவர்களால், புகழ்ந்து சொல்வதற்குரிய பொதுவான காரியம் அன்று. சொன்னம் -சொர்ணம்; தங்கம். (52) |