பருவத் தேவர்இராவணனிடம் சென்று கூறுதல் | 5483. | நீர் இடுதுகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப் பீரிடும் உருவர்;தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய், ஊர் இடு பூசல் ஆரஉளைத்தனர்; ஓடி உற்றார்;- பார் இடு பழுவச்சோலை பாரிக்கும் பருவத் தேவர். |
பார் இடுபழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர் - பூமியின் ஒரு பகுதியாகிய இலங்கையில் அடர்த்தியாக வளர்ந்துள்ள பெருஞ்சோலையைப் பாதுகாக்குகின்ற ஆறு பருவங்கட்கும் உரிய தேவர்கள்; அச்சம் நெருப்பு இடு நெஞ்சர் - பயமாகிய நெருப்பு மூளப்பெற்ற மனமுடையவர்களாகவும்; நீர் இடு துகிலர் - (அதனால்) சிறுநீரைவிட்டுக் கொண்ட ஆடையை உடையவர்களாகவும்; நெக்குப் பீர் இடும் உருவர் - உடல் நெகிழ்ந்து இரத்தம் பெருக்கெடு்த்து ஓடும் உருவம் உடையவர்களாகவும்; தெற்றிப் பிணங்கிடுதாளர் - நடக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்ட கால்களை உடையவர்களாகவும்; பேழ் வாய் ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் - தமது திறந்த வாய்களாகிய ஊரினர் செய்கின்ற ஆரவாரம் நிறையும்படி ஊளையிட்டவர்களுமாகி; ஓடி உற்றார் - ஓடி இராவணனிடம் போய்ச் சேர்ந்தனர். பருவத் தேவர்,துகிலர், நெஞ்சர், உருவர் தாளராய் ஓடியுற்றார். இது, இவர்கள் கொண்ட அச்சத்தையும் மெய்ப்பாடுகளையும் காட்டுகின்றது. இராவணது ஆணைக்கு அடங்கி, சோலையைக் காத்து வந்தனர் இவர்கள். இப்போது அனுமனது செயல்களைக் கண்டு அஞ்சி இராவணனிடம் ஓடுகின்றனர். பழுவம் - அடர்த்தி; பழுவச் சோலை - ஒருபொருட் பன்மொழி எனினும் அமையும். (55) |