| 5487. | தேவர்கள்,பின்னும், 'மன்ன ! அதன் உருச் சுமக்கும் திண்மைப் பூவலயத்தைஅன்றோ புகழ்வது ! புலவர் போற்றும் மூவரின் ஒருவன்என்று புகல்கினும், முடிவு இலாத ஏவம், அக்குரங்கை, ஐய ! காணுதி இன்னே' என்றார். |
தேவர்கள் -(இராவணன் இகழ்ந்ததைக் கண்ட) பருவத் தேவர்கள்; பின்னும் - மேலும், இராவணனை நோக்கி; மன்ன ! - அரசனே!; அதன் உருச் சுமக்கும் - அந்தக் குரங்கின் உடலைத் தாங்கவல்ல; திண்மை - வலிமை உடைய; பூவலயத்தை அன்றோ புகழ்வது - பூமியை அல்லவாபுகழ வேண்டியது!; அகுரங்கை - அந்தக் குரங்கை; புலவர் போற்றும் - தேவர்கள் வாழ்த்துகின்ற; மூவரின் ஒருவன் -மும்மூர்த்திகளில் ஒருவனே; என்று புகல்கினும் - என்று சொல்வதும்; முடிவுஇலாத ஏவம் - முடிவிலாத குற்றமாகும்; ஐய - ஐயனே!; இன்னே காணுதி -இப்போதே காண்பாய்; என்றார் - என்று சொன்னார்கள். அக் குரங்கின்வடிவைச் சுமக்கும் திண்மை உடைய பூமி புகழ்வதற்குரியது. தேவர்கள் வாழ்த்தும் மும்மூர்த்திகளுள் ஒருவன் அனுமன் என்று கூறினும் குற்றம். புலவர் - தேவர் ஏவம் - குற்றம். (59) |