கிங்கரர் போருக்குவிரைதல்

5491.

சூலம்,வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு,
                                     பிண்டி-
பாலமே முதலாஉள்ள படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனையமெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்
காலம்மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார்.

     சூலம்....படைக்கலம் பரித்தகையர் - சூலாயுதம், முதலிய
பலவகையான போர்க் கருவிகளைத் தாங்கிய கையர்களாகவும்; ஆலமே
அனைய மெய்யர் -
விஷத்தை ஒத்த கறுத்த உடலை உடையவராகவும்
உள்ள அரக்கர்கள்; அகலிடம் அழிவு செய்யும் காலம் - பூமிப்பரப்பு
முழுவதையும் அழித்து விடுதலை உடைய பிரளய காலத்தில்; மேல் எழுந்த
மூரிக் கடல் என -
பொங்கிக் கிளம்பிய வலிய கடல் போல; கடிது
செல்வார் -
விரைந்து போவாராயினர்.

     அரக்கவீரர்கள், கையில் ஏந்திய ஆயுதங்களின் பெயர்கள் வரிசைப்
படுத்தப்பட்டுள்ளன. பரித்தல் - தாங்குதல்; 'பரித்த காவினர்' (கம்ப. 768) (3)