5493.

திருகுறும்சினத்து, தேவர், தானவர், என்னும்
                             தெவ்வர்
இரு குறும்புஎறிந்து நின்ற இசையினார் வசை
                             என்று எண்ணி,
'பொரு குறும்புஏன்று, வென்று புணர்வது, பூ உண்
                             வாழ்க்கை
ஒரு குறுங் குரங்கு!' என்று எண்ணி, நெடிது நாண்
                             உழக்கும் நெஞ்சர்;

     திரு குறும்சினத்து - முரண் கொண்டகோபத்தை உடைய; தேவர்,
தானவர் என்னும் தெவ்வர்  -
தேவர்கள் அசுரர்கள் என்று

சொல்லப்படுகின்ற பகைவர்களுடைய; இரு குறும்பு எறிந்து நின்ற
இசையினார் -
பெரிய அரண்களை அழித்து, விளங்கும் நிலை பெற்ற
புகழையுடையவர்களுக்கு; பொரு குறும்பு ஏன்று - பொருகின்ற போரினை
மேற்கொண்டு; பூஉண் வாழ்க்கை ஒரு குறுங் குரங்கு - மலர் (காய்கனி
கிழங்கு) முதலியவற்றை உண்டு வாழ்கின்ற ஒரு சின்னக் குரங்கு; வென்றி
புணர்வது வசை என்று எண்ணி -
வெற்றி அடைவது இது ஒரு பெரும்
பழிப்பு ஆகும் என்று நினைத்து; நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் -
பெரிதும் வெட்கத்தால் வருந்தும் மனத்தினராயினர்.

     நாண் உழக்கும்நெஞ்சர்; தேவர் தானவர்களை வென்ற தாம், பூவை
உண்ணும் ஒரு குரங்கோடு போர் செய்ய நிகழ்ந்ததை நினைத்து வருந்தும்
மனத்தினர்.                                                 (5)