5494. | கட்டியவாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத் தட்டிய தோளர்;மேகம் தடவிய கையர்; வானை எட்டிய முடியர்;தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக் கொட்டிய பேரிஎன்ன, மழை என, குமுறும் சொல்லார்; |
கட்டிய வாளர் -இடையில்கட்டிய வாளாயுதத்தை உடையவர்கள்; இட்ட கவசத்தர் கழலர் - பூண்ட கவசத்தையும் வீரக் கழல்களையும் உடையவர்கள்; திக்கைத் தட்டிய தோளர் - திக்குகளின் எல்லையை முட்டிய தோள்களை உடையவர்கள்; மேகம் தடவிய கையர் - மேகங்களைத் தடவும்படி நீண்ட கைகளை உடையவர்கள்; வானை எட்டிய முடியர் - வான மண்டலத்தை எட்டித் தொட்ட தலையை உடையவர்கள்; தாளால் இடறிய பொருப்பர் - தம் கால்களால் இடறியெறியும் மலைகளை உடையவர்கள். (மலைகளைக் காலால் இடறித் தள்ளுபவர்); ஈட்டி கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் - ஒருங்கே சேர்த்து முழக்கப்பட்ட பேரிகை போலவும், மேகத்தின் இடி போலவும் முழங்குகின்ற சொற்களை உடையவர்கள். (6) |