5497. | பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்; மின் நின்றபடையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்; 'என் ?' என்றார்க்கு, 'என் ? என் ?' என்றார் எய்தியது அறிந்திலாதார்; முன் நின்றார்முதுகு தீய, பின் நின்றார் முடுகுகின்றார். |
பொன்நின்றுகஞலும் - அழகு நிலை பெற்று விளங்கும்; தெய்வப் பூணினர் - தெய்வத்தன்மையுள்ள அணிகளை உடையவர்; பொருப்புத் தோளர் - மலை போன்ற தோள்களை உடையவர்; மின் நின்ற படையும் கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர் - ஒளி பொருந்திய ஆயுதங்களையும் கண்களையும் வெயில் போல ஒளி பரப்பப் பெற்ற உடல்களையும் உடையவர்; என் என்றார்க்கு - (அவர்கள்) ஏன் போவது தடைப்படுகின்றது என்று தம் முன் நின்றவர்களைக் கேட்டவர்க்கு; எய்தியது அறிந்திலாதார் - அவர்கள் போகமுடியாமல் நெருக்கத்தால் தடையுற்றதை அறியாதவர்களாகி; முன் நின்றார் முதுகு தீய - தம் முன்னே நின்றவர்களுடைய முதுகுகள், அவர்களது மூச்சுக் காற்றால் தீப்பட்டன போல சூடுகொள்ள; என் என் என்றார் முடுகின்றார் - என்ன என்ன என்று விரைந்து வினவுபவராய் விரைபவரானார்கள். என் என்என்றார்; அடுக்கு விரைவுப் பொருளது. (9) |