5500.

எற்றுறு முரசும், வில், நாண் ஏறவிட்டு எடுத்த
                          ஆர்ப்பும்,                    
சுற்றுறு கழலும்,சங்கும், தெழி தெழித்து உரப்பும்
                         சொல்லும்,
உற்று உடன்றுஒன்றாய், ஓங்கி ஒலித்து எழுந்து,
                         ஊழிப் பேர்வில்
நல் திரைக்கடல்களோடு மழைகளை, நா அடக்க.

     எற்று உறு முரசும்- தாக்கிஅடிக்கப்படுகின்ற முரசத்தின் ஓசையும்;
வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் - வில்லிலே நாணை ஏற்றிப் பூட்டி
(அதனைத் தட்டி) எழுப்பிய ஒலியும்; சுற்றுறு கழலும் - காலில் சுற்றிக்
கட்டிய வீரக்கழல்களின் ஒலியும்; சங்கும் - சங்குகளை முழக்கும் ஒலியும்;
தெழி தெழித்து உரப்பும் சொல்லும் - இரைச்சலிட்டு அதட்டுகின்ற சொல்
முழக்கமும்; உடன்று ஒன்றாய் உற்று ஓங்கி எழுந்து - (ஆகிய
ஒலிகளெல்லாம்) மாறுபட்டு பின்பு ஒன்றாகச் சேர்ந்து மிகப் பேரொலியாகக்
கிளம்பி; ஊழிப் பேர்வில் - யுகங்கள் முடிந்து மாறுங்காலத்தில்; நல்திரை
கடல்களோடு மழைகளை நா அடக்க -
பெரிய அலைகளோடு எழும்
கடல்களின் கொந்தளிப்போடு, அப்போது உண்டாகும் மழைகளின் ஒலியையும்
அடக்கும்படி (மிகுந்து விளங்க).

     முரசு, கழல்,சங்கு, நாண் என்பவை. தானி ஆகு பெயராய் நின்று,
அவற்றினின்று எழுந்த ஒலிகளைக் குறிப்பன.                      (12)