| 5501. | 'தெரு இடம்இல்' என்று எண்ணி, வானிடைச் செல்கின்றாரும், புருவமும் சிலையும்கோட்டி, புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும், ஒருவரின் ஒருவர்முந்தி, முறை மறுத்து உருக்கின்றாரும், 'விரிவு இலதுஇலங்கை' என்று, வழி பெறார் விளிக்கின்றாரும். |
தெரு இடம் இல்என்று எண்ணி - தெருவில் நடப்பதற்குப் போதுமான இடம் இல்லை என்று கருதி; வானிடைச் செல்கின்றாரும் - ஆகாய வழியாகச் செல்கின்றவர்களும்; புருவமும் சிலையும் கோட்டி - தம்புருவங்களையும் விற்களையும் வளைத்து; புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும் - (கோபத்தீயால்) புகையை வெளிப்படுத்தி பெருமூச்சு விடுகின்றவர்களும்; ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் - ஒருவரை ஒருவர் முன்னிட்டு, முறை தவறியதனால் (தவறியவர் மீது) கோபம் கொள்கின்றவர்களும்; இலங்கை விரிவு இலது என்று - இலங்கைநகர், வீரர்கள் செல்வதற்கு ஏற்ற பரப்பு உடையதன்று என்ற காரணத்தால்; வழிபெறார் விழிக்கின்றாரும் - தாம் செல்லும் வழியைப் பெறாதவர்களாய், இன்னது செய்வது என்று அறியாமல் மருண்டு விழித்துக் கொண்டிருக்கின்றவர்களும். புருவம்கோட்டுதல், சினத்தில் தோன்றும் மெய்ப்பாடு. சிலம் - அரங்கேற்று காதை. வெகுண்டோன் அவிநயம். (13) |